முன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவர் கைது

முன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவரை 10 கி.மீ. தூரம் விரட்டி சென்று சக ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடித்தனர்.

Update: 2019-08-17 23:15 GMT
போத்தனூர்,

கோவை மலுமிச்சம்பட்டி மணியக்கார கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 45). ஆட்டோ டிரைவரான இவர் மலுமிச்சம்பட்டி பிரிவு அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஆட்டோ நிறுத்தத்தில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த பிரபு (39) என்பவரும் ஆட்டோ ஓட்டி வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆட்டோவை வாடகை எடுப்பதில் ஆனந்தகுமார், பிரபு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானதாக தெரிகிறது. இதனால் பிரபுவை ஆட்டோ உரிமையாளர் வேலையை விட்டு நீக்கிவிட்டார். இதன்பின்னர் பிரபு வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மலுமிச்சம்பட்டி அருகே தனது ஆட்டோவில் காத்திருந்த பிரபு, சாலையை கடக்க முயன்ற ஆனந்தகுமார் மீது ஆட்டோவை ஏற்றி கொல்ல முயன்றார். பின்னர் அவர் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றார். அப்போது அருகில் இருந்த சக ஆட்டோ டிரைவர்கள், மோட்டார் சைக்கிளில் 10 கி.மீ. தூரம் விரட்டி சென்று கிணத்துக்கடவு அருகே பிரபுவை மடக்கி பிடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செட்டிப்பாளையம் போலீசார் பிரபுவை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் முன்விரோதம் காரணமாக ஆனந்தகுமாரை கொலை செய்வதற்காக 30 நிமிடங்கள் ஆட்டோவில் காத்திருந்து அவர் மீது மோதியது தெரியவந்தது. முன்னதாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த ஆனந்தகுமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து பிரபு மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்