சிவகங்கை அருகே 1,000 ஆண்டு பழமையான யானை சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிப்பு

சிவகங்கை அருகே 1,000 ஆண்டு பழமையான யானை சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-17 23:45 GMT
சிவகங்கை,

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வரும் கல்லூரி பேராசிரியர் மூவேந்தன் என்பவர் தனது சொந்த கிராமமான சிவகங்கையை அடுத்த சாத்தரசன்கோட்டை அருகே பாப்பாகுடி கிராமத்தில் உள்ள சமயன் கோவிலில் சுமார் 1,000 ஆண்டு கால யானை சின்னம் கொண்ட சூலக்கல் இருப்பதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவரது தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்குடி புலவர் காளிராசா ஆகியோர் அந்த கிராமத்தைச் சேர்ந்த ராமக்கண்ணன் உதவியுடன் சாத்தரசன்கோட்டை அருகே உள்ள பாப்பாகுடியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான யானை சின்னம் உள்ள சூலக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:-

மன்னர்கள் காலத்தில் கோவில்களில் தினசரி வழிபாட்டிற்காக, விளைநிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி அவற்றை கோவில்களுக்கு தானமாக வழங்குவார்கள். இந்நிலங்களின் விளைச்சல் மூலம் கோவில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். அந்த வகையில் சிவன் கோவிலுக்கு வழங்கும் நிலதானம் தேவதானம் என்றும், திருமால் கோவில்களுக்கு வழங்குவது திருவிடையாட்டம் என்றும், சமண, பவுத்த பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலங்களின் 4 எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்கள் நடப்பட்டு அவை பாதுகாக்கப்படும்.

இதுவே திருமால் கோவில் என்றால் அங்கு சங்கு சக்கரமும், சமணப்பள்ளி என்றால் முக்குடையும், பவுத்த பள்ளி என்றால் அங்கு தர்ம சக்கரமும் எல்லைக் கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும். பாப்பாகுடி சமயன் கோவிலில் ஒரு சூலக்கல்லும், சக்கரம் பொறிக்கப்பட்ட ஒரு திருவாழிக்கல்லும் இதற்கு முன்பு வசித்த மக்களின் வழிபாட்டில் இருந்துள்ளது. இந்த சமயன் கோவிலில் உள்ள சூலக்கல் 3 அடி உயரம், ஒரு அடி அகலம் உள்ள கருங்கல்லால் ஆனது. இதன் 4 பக்கங்களிலும் புடைப்புச் சிற்பமாக திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பக்கத்தில் திரிசூலத்தை தன் முதுகில் தாங்கிச் செல்லும் யானையின் சிற்பம் உள்ளது. அதன் மறுபக்கத்தில் சூலத்தின் மேல்பகுதியில் சந்திரனைக் குறிக்கும் பிறை வடிவம் உள்ளது.

இந்த கல்லில் யானை சின்னம் இருப்பதன் மூலம் அத்திகோசத்தார் எனும் யானைப்படை வீரர்கள் வழங்கிய தேவதான நிலத்தில் நட்டு வைக்கப்பட்டதாக இதை கருதலாம். வணிகர்கள் தங்களின் பாதுகாப்புக்காக வைத்திருந்த யானைப்படையினர்தான் அத்திகோசத்தார் என அழைக்கப்பட்டனர். இவர்கள் பெருவழிகளில் செல்லும் வணிகர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மன்னர்கள் கோவில்களுக்கு கொடையளிக்கும் போது உடனிருந்து அக்கொடையை பாதுகாக்கும் பணிகளையும் இவர்கள் செய்துள்ளனர். இவர்கள் குறித்து முதன்முதலில் பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்