குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-08-18 22:15 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1984-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் உள்ள தூண்களில் வெடிப்புகள் காணப்படுகிறது.

3 ஆண்டுகளாக இந்த தொட்டியில் குடிநீர் நிரப்புவதில்லை. ஆழ்துளை கிணறுகளில் இருந்து நேராக குழாய்களுக்கு இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. கோடை வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர் சேறும், சகதியாக வருகிறது. இந்த தண்ணீர்தான் தற்போது பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை குடிப்பதால் பலர் நோய்வாய்பட்டு வருவதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் பழுதடைந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் சிறுவர்கள் விளையாடுகின்றனர். விவசாயிகள் சிலர் தூண்களில் ஆடு, மாடுகளை கட்டி வருகின்றனர். ஆபத்தான இடிந்துவிழும் நிலையில் உள்ள இந்த மேல்நிலை தொட்டியை அகற்றி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் புதிய ஆழ்துளை கிணற்றை அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்