திருத்தணியில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

திருத்தணியில் உள்ள அரக்கோணம் சாலையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-08-18 23:30 GMT
திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரக்கோணம் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் திருவள்ளூர் அருகில் உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 30) என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி ஓட்டலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சிவா, குமார் மற்றும் போலீசார் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த ஜபான் என்கிற விமல்ராஜ் (25), கோபிராஜ் (24), சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் (26), அஜித்குமார் (26) மற்றும் கார் டிரைவர் சதீஷ் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் பெருமாள்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் அனைவரும் தப்பி ஓடி சுவர் ஏறி குதித்தபோது கீழே விழுந்து கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு ஆண்டாக அவர்களுக்கும் மகேஷ்குமார் தரப்பினருக்கும் இடையே வாலிபால் போட்டியில் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.

மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்