சிக்னல் கோளாறு திருச்சிக்கு தாமதமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகள் கடும் அவதி

சிக்னல் கோளாறு காரணமாக திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2019-08-18 22:30 GMT
திருச்சி,

விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி சிக்னல் கோளாறை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். அதன்பின் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன.

இந்த சம்பவத்தினால் சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை 2.20 மணிக்கு வர வேண்டியது ஒரு மணி நேரம் தாமதமாக அதிகாலை 3.20 மணிக்கு வந்து புறப்பட்டது. இதேபோல சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சிக்கு அதிகாலை 2.40 மணிக்கு வரவேண்டியது ஒரு மணி நேரம் 27 நிமிடம் தாமதமாக அதிகாலை 4.07 மணிக்கு வந்து புறப்பட்டு சென்றது.

பயணிகள் கடும் அவதி

மேலும் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில், மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக திருச்சி வந்தன. ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் இந்த ரெயிலில் வந்தவர்களை வரவேற்க திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் சிரமம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்