சாடிவயல் முகாமில் இருந்து தப்பி ஓடிய கும்கி யானையை மீட்ட வனத்துறையினர்

கோவை அருகே உள்ள சாடிவயல் முகாமில் இருந்து தப்பி ஓடிய கும்கி யானையை வனத்துறையினர் மீட்டனர்.

Update: 2019-08-19 22:45 GMT
கோவை,

கோவை கோட்ட வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை கோட்ட வனப்பகுதி வழிப்பாதையாகவும் (வலசைபாதை) உள்ளது. இவ்வாறு இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

குறிப்பிட்ட பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தால், அவற்றை வனப்பகுதிக்குள் துரத்துவதற்காக கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி கோவை அருகே உள்ள சாடிவயலில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் கும்கி யானைகள் முகாம் செயல்பட்டு வருகின்றன. இங்கு 2 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் சேரன், ஜான் என்ற 2 கும்கி யானைகள் சாடிவயல் முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த யானைகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து 21 வயதான சுயம்பு, 36 வயதான வெங்கடேஷ் என்ற 2 கும்கி யானைகள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த மாதத்தில் சுயம்பு என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் வெங்கடேஷ் என்ற கும்கி யானையும் சாடிவயல் முகாமுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் அந்த கும்கி யானை அங்கு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. சாடிவயல் முகாம் அருகே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் இந்த கும்கி யானையை பராமரிக்க பிரசாத் என்ற தலைமை பாகன், உதவி பாகன் என்று 2 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாகன்கள், கும்கி யானையை கட்டி வைக்கும் இடத்துக்கு சென்றபோது அங்கு கும்கி யானை வெங்கடேஷ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அது காலில் கட்டப்பட்டு இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது தெரியவந்தது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உத்தரவின்பேரில், வனத்துறையினர், பாகன்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் கும்கி யானை வெங்கடேசை வனப்பகுதிக்குள் தேடி சென்றனர்.

அப்போது சாடிவயல் முகாம் அருகே 2 கி.மீ. தூரத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கும்கி யானை நின்று கொண்டு இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த யானையை பாகன்கள் முகாமுக்கு கொண்டு வந்து, அதற்கு தண்ணீர் கொடுத்தனர். பின்னர் யானையை சங்கிலியால் கட்டி வைத்தனர். தொடர்ந்து அந்த கும்கி யானை தப்பி சென்று விடாமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘கும்கி யானை வெங்கடேஷை லாரியில் அழைத்து வந்தபோது, அதன் காலில் லேசாக காயம் ஏற்பட்டது. இதனால் அதன் காலில் சங்கிலியை இறுக்கமாக கட்டவில்லை. இதனால் அது சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளது. டாப்சிலிப்பில் அது பராமரிக்கப்பட்ட சீதோஷ்ணநிலை வேறு மாதிரியாக இருக்கும்.

சாடிவயலில் காலநிலை வேறுமாதிரியாக இருக்கும். ஓரிரு நாட்களில் இங்குள்ள காலநிலையை அதுக்கு பழகிவிடும். எனினும் அந்த கும்கி யானை தப்பிச்செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்