வாலிபர் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

வாலிபர் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2019-08-19 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் பொன்வண்டு என்ற பொன்ராஜ் (வயது 27). இவர், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த வக்கீல் திலக்கிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசபூபதி (25) என்பவரும் மாற்று டிரைவராக வேலை பார்த்தார்.

கடந்த 24.7.2015 அன்று கணேசபூபதி பெட்ரோல் வாங்க சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரம் கழித்து வந்தார். அப்போது தன்னை சிலர் தாக்கியதாக கூறினார். இதனால் வக்கீல் திலக், பொன்வண்டு என்ற பொன்ராஜ், கணேசபூபதி உள்ளிட்டோர் பெட்ரோல் பங்க் அருகே சென்று பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால், அவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பினர். அப்போது பொன்ராஜ் வீணாக அலைய வைத்து விட்டதாக கூறினார். இதில் பொன்ராஜிக்கும், கணேசபூபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்ராஜ் காரில் இருந்த அரிவாளை எடுத்து கணேசபூபதியை சரமாரியாக வெட்டினார். இதில் கணேசபூபதி துடித்துடித்து இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன், குற்றம் சாட்டப்பட்ட பொன்ராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோமதி மணிகண்டன் ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்