4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-20 23:15 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அனைத்து அரசு மருத்துவர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதியம் 12 மணி முதல் 1 மணி வரை டாக்டர் நாச்சியப்பன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் கிருபாகரன், சங்கர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அனைத்து அரசு மருத்துவர்களின் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளார் டாக்டர் நாச்சியப்பன் கூறியதாவது, மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் அனைத்து டாக்டர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி சென்னையில் சாகும் உண்ணாவிரத போராட்டம் வரை நடைபெறுகிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் சில மருத்துவர்கள் பங்கு பெற உள்ளனர். மேலும் 27-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்