எதிர்க்கட்சிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - ரங்கசாமி தலைமையில் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர்

புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

Update: 2019-08-20 23:45 GMT
புதுச்சேரி,

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. எடியூரப்பா தலைமையில் அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.

இதேபோல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்க முயற்சி எடுக்கும் என்று பரவலாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக புதுவை மாநிலத்தில் இந்த முயற்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்பட்டது.

இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களுக்கு முன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தலைமையில் எதிர்க்கட்சி களான அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகளின் எம்.எல். ஏ.க்கள் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அப்போது அடுத்து சில முயற்சிகளை எடுக்க உள்ளதாகவும், அதற்கு அனைவரும் ஒற்றுமையாக ஆதரவு தரவேண்டும் என்றும் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டு சேர்ந்து திட்டமிட்டுள்ள நடவடிக்கை என்ன என்று இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சட்டசபைக்கு வந்தனர்.

அப்போது சபாநாயகர் சட்டசபை அலுவலகத்தில் இல்லாததால் அவர்கள் நேராக சட்டசபை செயலாளர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு செயலாளர் வின்சென்ட்ராயரை சந்தித்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கடிதத்தை கொடுத்தனர்.

அதன்பின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் சபாநாயகர் சிவக்கொழுந்து தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதனால் அவர் சட்டசபையை நடுநிலையாக நடத்தமாட்டார். இதனால் அவர் மீது சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.

புதுவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வசதியாக தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் பதவியேற்றார். வைத்திலிங்கம் ராஜினாமாவை யொட்டி காலியான சபாநாயகர் பதவியை முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான லட்சுமிநாராயணன் விரும்பினார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்ற நிகழ்ச்சியை புறக்கணித்து தனது அதிருப்தியை வெளிப்படையாக காட்டினார்.

இந்தநிலையில் தற்போது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து எதிர்க்கட்சிகள் கடிதம் கொடுத்துள்ளன. இந்த நடவடிக்கை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு முதல் படியாக பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் புதுவை அரசியல் சதுரங்கத்தில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்களை காணலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

புதுவை சட்டசபையில் கட்சிகளின் பலம் வருமாறு:-

மொத்தம் 33 (நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்பட)

ஆளுங்கட்சி

காங்கிரஸ் -14

தி.மு.க. - 3

சுயேட்சை

(காங்கிரஸ் ஆதரவு) - 1

மொத்தம் -18

எதிர்க்கட்சி வரிசை

என்.ஆர்.காங்கிரஸ் - 7

அ.தி.மு.க. - 4

பா.ஜனதா - 3

மொத்தம் -14

காலியிடம் - 1

மேலும் செய்திகள்