குழந்தைகளின் பாலியல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர்கள், போலீசாருக்கு சிறை தண்டனை உண்டு

குழந்தைகளின் பாலியல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர்கள், போலீசாருக்கு சிறை தண்டனை உண்டு முதன்மை மாவட்ட நீதிபதி தகவல்.

Update: 2019-08-20 22:30 GMT
குன்னம்,

குன்னம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி டி.லிங்கேஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் பட்சத்தில் பாலியல் தாக்குதல் ஏற்படுத்திய நபர்களுக்கு அதிகப்பட்சம் மரணதண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு. குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். மேலும் பாலியல் குற்றங்கள் குறித்து தெரிய வரும் போது சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களுக்கும் சிறைத்தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உண்டு. இதேபோல் காவல் துறை அதிகாரிகளுக்கும் இது பொருந்தும். மேலும் புகார் அளிக்கும் மாணவ- மாணவிகளின் ரகசியம் பாதுகாக்கப்படும். எனவே பெண் குழந்தைகள் தயங்காது அவர்கள் இது குறித்து தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் பள்ளி தலைமையாசிரியர் பிரியா வரவேற்றார். சார்பு நீதிபதி வினோதா, நீதித்துறை நடுவர் செந்தில்ராஜா, மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு அலுவலர் அருள்செல்வி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அலுவலர்கள், சமூக சட்ட ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்