குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வேலூர் அருகே புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Update: 2019-08-21 21:45 GMT
வேலூர், 

வேலூரை அடுத்த ஊசூரை அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் புதுப்பாளையம் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்துளை கிணறு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நீர்தேக்க தொட்டிக்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் இருந்து மேட்டுகாலனி, எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து நீரை செலுத்தினாலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு போதுமான தண்ணீர் வரவில்லை. எனவே ஏற்கனவே உள்ள பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் நேரில் தெரிவித்தும், பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த புதுப்பாளையம் பகுதி பொதுமக்கள் நேற்று வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், “மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் பிரதான குழாயில் இணைக்கப்பட்ட புதிய இணைப்புகளால் குடிநீர் வினியோகம் இல்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தோம். எங்கள் பகுதியில் காணப்படும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், தினமும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்