இ-சேவை மையங்களில் உள்ள குறைகளை களைய இந்திய மேலாண்மை கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் அமைச்சர் பேட்டி

‘இ-சேவை மையங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை களைய இந்திய மேலாண்மை கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2019-08-21 23:00 GMT
திருச்சி,

திருச்சி இந்திய மேலாண்மை கழகத்துடன், தமிழக அரசின் இ-சேவை மையமானது தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் தொடக்கவிழா மற்றும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று திருச்சி-புதுக்கோட்டை ரோட்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே உள்ள இந்தியன் மேலாண்மை கழகத்தில் நடந்தது.

இந்திய மேலாண்மை கழக இயக்குனர் பீமராய் மெட்ரி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொழில்நுட்ப துறை அரசின் முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், கருத் தரங்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் இங்கு நடைபெறுகிற கருத்தரங்கம் மூலம் தொழில் நுட்ப உதவிக்கான வசதி பெற முடியும். வருங்காலங்களில் உணவு, உடை, இருப்பிடத்துடன் இன்டர்நெட் வசதியும் அவசியம் வேண்டும். அது இல்லை என்றால் கண்ணிருந்தும் குருடர்கள் போல ஆகி விடுவர். இன்டர்நெட் வசதி இல்லை என்றால் நாம் நவீன சமுதாயத்திற்குள் வரமுடியாது.

இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது இங்கு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இதன் மூலம் இ-சேவை மையங்களில் பொதுநிர்வாகம், வருவாய், சமூக பாதுகாப்பு நலத்திட்டங்கள் மற்றும் இதர சேவைகளை துரிதப்படுத்த முடியும். வருவாய்த்துறையுடன் தகவல் தொழில்நுட்பம் இணையும்போது தமிழகம் மேலும் பல வளர்ச்சிகளை அடையும். அத்துடன் இ-சேவை மையங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை களைய தான் இந்திய மேலாண்மை கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

மக்கள் தொகை, நிர்வாகம் மற்றும் பூகோள அடிப்படையில் தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசின் கொள்கை முடிவின்படி புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. தற்போது தமிழகத்தில் 85 புதிய தாலுகாக்கள், 11 புதிய வருவாய் கோட்டங்கள், 5 புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்