பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை: மீனவர்கள் 3 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடியது

கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-08-21 23:30 GMT
தூத்துக்குடி, 

தனுஷ்கோடி முதல் குளச்சல் வரையிலான வங்கக்கடலோரத்தில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்றும், கடல் அலைகள் 2.8 மீட்டர் முதல் 3.4 மீட்டர் வரை உயரமாக வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் செல்வது ஆபத்தானதாக இருக்கும் என்பதால் நேற்று முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களை தொடர்பு கொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கரையோரங்களில் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக வைக்குமாறும் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து, நேற்று மாலையில் திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரை வெறிச் சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்