கவர்னர் இன்று நெல்லை வருகை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (வியாழக்கிழமை) நெல்லை வருகிறார். அவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Update: 2019-08-21 23:15 GMT
நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த விழா பல்கலைக்கழகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசுகிறார். சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

இந்த ஆண்டு மொத்தம் 48 ஆயிரத்து 400 மாணவ-மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். நேரடியாக 753 பேருக்கு விழா மேடையில் பட்டம் வழங்கப்படுகிறது.

இதில், 650 பேர் பி.எச்.டி. பட்டம் பெறுகிறார்கள். 103 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 4 பேர் இரட்டை பதக்கம் பெறுகிறார்கள்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள கிராம மக்கள் மதம் மாறினார்கள். இதுபற்றி ‘மத மாற்றம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்துள்ளார். அவர் கவர்னரிடம் முனைவர் பட்டம் பெறுகிறார். இதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சுமார் ரூ.9 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (வியாழக்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். மதிய உணவு சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து பட்டமளிப்பு விழா மேடைக்கு பகல் 1.30 மணிக்கு வருகிறார். பின்னர் பட்டமளிப்பு விழா நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு விழா நிறைவடைகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சென்று சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் வருகையையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் உத்தரவின்படி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர் வரும் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

விழா ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, பதிவாளர் சந்தோஷ்பாபு மற்றும் பேராசிரியர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்