மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் 5 மாதத்திற்கு பின்பு கைது

சிவகங்கையில் பள்ளி மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவரை 5 மாதத்திற்கு பின்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-22 22:15 GMT
சிவகங்கை,

சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 34). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முத்து செல்வம் ஆட்டோ டிரைவராக இருந்தார். இவரது ஆட்டோவில் 15 வயது சிறுமி ஒருவர் தினசரி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை முத்துசெல்வம் கடந்த மார்ச் 23-ந் தேதி கடத்தி சென்று விட்டார். இது தொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர், சிறுமி ஆகியோரை தேடி வந்தனர். ஆனால் சிறுமியை கண்டு பிடிக்க முடியாததால், பெற்றோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் உத்தரவின் பேரில், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் கபூர் மேற்பார்வையில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், முத்துசெல்வம் நாமக்கல் அருகில் உள்ள செவந்திபட்டி என்ற கிராமத்தில் சிறுமியுடன் தங்கி இருந்து ஒரு மில்லில் வேலை பார்த்து வருவது தெரிந்தது

இதையடுத்து நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார் அங்கு சென்று முத்துசெல்வத்தையும், சிறுமியையும் மீட்டு வந்தனர். பின்பு சிறுமியை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜர் படுத்தினார். அவரை தாயாருடன் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து சுமார் 5 மாதத்திற்கு பின்பு மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் முத்து செல்வத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்