ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில், 2 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் 2 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-08-22 23:00 GMT
கோவை,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. நேற்று முன்தினம் இரவு டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து கோவையில் காங்கிரசார் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்படி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் வீனஸ்மணி, பச்சைமுத்து, கே.எஸ்.மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், சவுந்தரகுமார், கோவை போஸ், வக்கீல் கருப்புசாமி, வடவள்ளி காந்தி, பாலு, பி.கே.காமராஜ், கோவை போஸ், காந்தகுமார், உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசையும், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதேபோல், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி காந்தி பார்க் ரவுண்டானா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், எச்.எம்.எஸ் தலைவர் ராஜாமணி, கே.பி.செல்வராஜ், ஐ.என்.டி.யு.சி. தலைவர் கோவை செல்வன், அழகு ஜெயபாலன், சொக்கம்புதூர் கனகராஜ், விஜயகுமார், காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஹரிகரசுதன், கே.பி.எஸ்.மணி, அழகு ஜெயபாலன், ஷோபானா, காயத்திரி, குனிசை செல்வம், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி வந்திருந்தனர். 

மேலும் செய்திகள்