அடுத்தடுத்து 3 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: மோட்டார்சைக்கிளில் தப்பிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு

செங்குன்றத்தில் அடுத்தடுத்து 3 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்துவிட்டு, மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-08-23 22:15 GMT
செங்குன்றம்,

செங்குன்றம் காந்தி நகரை சேர்ந்தவர் விஜய்பாலேந்திரன்(வயது 31). லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் பைபாஸ் சாலையில் லாரியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர், விஜய்பாலேந்திரனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

பின்னர் மர்மநபர்கள், செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் புதுநகர் அருகே நடந்து சென்ற அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்த ரூபன்(20) என்பவரிடம் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் ரூ.1,500 ஆகியவற்றை பறித்தனர்.

மேலும் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை அருகே நடந்து சென்ற வடமாநில வாலிபர் அஜய் என்பவரையும் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துவிட்டு மோட்டார்சைக்கிள் ஆசாமிகள் தப்பிச்சென்றனர். இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். செங்குன்றத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேரிடம் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

*எண்ணூரில் காது கேளாத, வாய் பேச முடியாத 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த சுகுமாறன்(17) என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

*கள்ளக்காதல் தகராறில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் மயிலாப்பூரை சேர்ந்த தினேஷ்குமார்(26) வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அர்னால்டு(32) என்ற மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

*மடிப்பாக்கத்தில் வெங்டேச சாஸ்திரிகள், ராஜேந்திரன் உள்பட 3 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து 56 பவுன் தங்க நகைகள், காரை திருடிய வழக்கில் சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் பிரம்மமூர்த்தி(28) என்பவரை கைது செய்த போலீசார், 21 பவுன் நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவான அவரது கூட்டாளி வினோத்(28) என்பவரை தேடி வருகின்றனர்.

*புளியந்தோப்பில் உதயகுமார் (34) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வெற்றி (37) மற்றும் சுரேஷ் (38) கைது செய்யப்பட்டனர்.

*திருமுல்லைவாயலில் சாலையில் நடந்து சென்ற அழகு நிலைய பெண் வேதவள்ளி (30) என்பவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

*முன்விரோத தகராறில் மயிலாப்பூரை சேர்ந்த கேபிள் குமார்(52), அவருடைய மகன் மணிகண்டன்(26) ஆகியோரை அதே பகுதியை சேர்ந்த அருள், அவரது நண்பர் தமிழரசன் ஆகியோர் கத்தியால் குத்தினர்.

மேலும் செய்திகள்