கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

Update: 2019-08-23 22:30 GMT
கடலூர்,

கடலூரில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை கடலூரில் லேசான சாரல் மழை பெய்தது. அதன்பிறகு மழை இல்லை. இருப்பினும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அதேவேளை விருத்தாசலம், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, புவனகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 13.30 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக பெலாந்துறை, கொத்தவாச்சேரியில் தலா 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

இதேபோல் சிதம்பரம் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இந்த மழையால் உசுப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, வேளக்குடி, ஜெயங்கொண்டபட்டினம், வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

அண்ணாமலைநகர்- 12, குப்பநத்தம் - 8.80, குடிதாங்கி -7.50, ஸ்ரீமுஷ்ணம்- 7.30, சிதம்பரம்- 7.20, வேப்பூர்-6, சேத்தியாத்தோப்பு- 5.20, வானமாதேவி- 5.20, புவனகிரி- 5, லால்பேட்டை- 5, பண்ருட்டி- 4.

மேலும் செய்திகள்