சீரான குடிநீர் வழங்கக்கோரி மறியலுக்கு முயன்ற பொதுமக்கள் - பொள்ளாச்சியில் பரபரப்பு

பொள்ளாச்சியில் குடிநீரை சீராக வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-23 22:15 GMT


பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.சந்திராபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு அம்பராம்பாளையம் ஆழியாறில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது தவிர அங்குள்ள கிணற்றில் இருந்தும் தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் உடுமலை ரோட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்க பணியின் காரணமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆழியாற்று தண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கிணற்றில் இருந்தும் தண்ணீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். எனவே குடிநீரை சீராக வினியோகம் செய்ய கோரி உடுமலை ரோட்டில் ஊஞ்சவேலாம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதற்காக எஸ்.சந்திராபுரத்தில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொது மக்கள் சீரான குடிநீர் வழங்க வேண்டு என்று வலியுறுத்தினர்.அதற்கு போலீசார், மின் தடை காரணமாக கிணற்றில் இருந்து தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது தண்ணீர் தொட்டிக்கு செல்கிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். ஆழியாற்று தண்ணீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பேச்சுவார்த்தையில் சமசரம் ஏற்பட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்