தஞ்சையில் டாக்டர் உறவினர் வீட்டில் 4 பவுன்திருட்டு - வேலைக்கார பெண் கைது

தஞ்சையில் டாக்டரின் உறவினர் வீட்டில் 4 பவுன் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-23 21:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு வீதியை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ்பாபு. இவருடைய அத்தை யசோதா(வயது91). இவர் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவரை பராமரிக்கவும், சமையல் செய்து கொடுக்கவும் வடக்கு பூக்கொல்லை தேவிநகரை சேர்ந்த ஆனந்தி(45) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் யசோதாவை முறையாக பராமரித்து வந்ததுடன் தனியாக இருப்பதை பயன்படுத்தி பீரோவை திறந்து அதில் இருந்த தங்க வளையல், மோதிரம், தோடு ஆகியவற்றை திருடினார்.

இவற்றை எல்லாம் வெளியே எங்காவது கொண்டு சென்றால் எளிதில் மாட்டி கொள்வோம் என யசோதா வீட்டிற்குள் இருந்த சலவை பெட்டிக்குள்(வாசிங்மிஷின்) பதுக்கி வைத்தார். யசோதா வீட்டிற்கு உறவினர்கள் வந்தபோது பீரோவில் இருந்த நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் டாக்டர் ரமேஷ்பாபு புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீட்டில் பீரோ, கதவு எதுவும் உடைக்கப்படாமல் சாவியை பயன்படுத்தி பீரோ திறக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டில் வேலை செய்து வந்த ஆனந்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் நகையை திருடி சலவை பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 4 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்