மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கபிஸ்தலம் அருகே நடந்தது

கபிஸ்தலம் அருகே மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-23 21:30 GMT
கபிஸ்தலம்,

கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை கடந்த 5 ஆண்டுகளாக சரியான முறையில் கரும்பு அரவை செய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் வெட்டப்பட்ட கரும்பிற்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தினை சரியாக வழங்காமல் நிலுவையில் இருந்து வந்தது.

இதனை கண்டித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இந்தநிலையில் கடந்த ஆண்டு கரும்பு அரவையை ஆலை நிறுத்தியது. இதனால் கரும்பு பயிர் செய்த விவசாயிகள் பயிர் செய்த கரும்பினை மற்றொரு ஆலைக்கு வெட்டி அனுப்பினர். இந்த நிலையில் 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை சர்க்கரை ஆலையில் பணிபுரியும் 287 ஊழியர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் சென்னையில் இருந்து கமிட்டி அமைக்கப்பட்டு அவர்கள் சர்க்கரை ஆலையை ஆய்வு செய்து சென்றனர். அதன்பின்னர் ஊதியம் வழங்க விட்டாலும் பரவாயில்லை, பணிக்கு வருவோம் என ஊழியர்கள் தெரிவித்ததன் பேரில் தொடர்ந்து பணிக்கு ஊழியர்கள் சென்று வந்தனர்.

ஆலையின் நுழைவுவாயிலில் உள்ள தகவல் பலகையில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் 11 பேர்கள் மட்டும் ஆலைக்கு பணிக்கு வந்தால் போதும் மீதி உள்ளவர்கள் பணிக்கு வர வேண்டாம் என எழுதப்பட்டு இருந்தது.

இதனை கண்டித்து ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் பொது செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆலை வாயிலில் நின்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பணிக்கு செல்லும் காவலர்களை பணிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யம்பேட்டை முருகேசன் (பொறுப்பு) மற்றும் போலீசார் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து ஆலையின் பொது மேலாளர் கார்முகிலனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சென்னையில் உள்ள கமிட்டியினர் அடுத்த வாரம் இங்கு வர உள்ளனர். அப்போது இந்த கோரிக்கைகள் குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வழக்கம் போல் பணிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்