ஓடும் ரெயிலில் மருத்துவ மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது

ஓடும் ரெயிலில் மருத்துவ மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-24 22:15 GMT
திருச்சி,

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவர் தனராஜ் (வயது 47). ரெயில்வே டிக்கெட் பரிசோதகரான இவர் கடந்த 22-ந் தேதி இரவு சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணியில் இருந்தார். ரெயிலில் முன்பதிவு பெட்டி ஒன்றில் மருத்துவ மாணவி ஒருவர் காரைக்குடிக்கு பயணம் செய்தார். இந்த நிலையில் நள்ளிரவில் ரெயில் புதுக்கோட்டை அருகே சென்றபோது அந்த மாணவியிடம் டிக்கெட் பரிசோதகர் தனராஜ் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி, தன்னுடன் பயணித்த தனது தந்தையிடம் தெரிவித்தார். இந்த நிலையில் ரெயில் காரைக்குடி சென்றதும் அங்குள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளித்தனர். சம்பவம் நடந்த இடம் திருச்சி ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடம் என்பதால், அந்த புகாரை திருச்சிக்கு, காரைக்குடி ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர்.

சிறையில் அடைப்பு

இந்த புகார் தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புகாரில் கூறியிருப்பது உண்மை என்பது தெரியவந்ததால் டிக்கெட் பரிசோதகர் தனராஜை ரெயில்வே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் ரெயில்வே போலீசார் அடைத்தனர். கைதான தனராஜ் மீது ரெயில்வே நிர்வாகம் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்