கடைமடை பகுதிக்கு விரைவில் சென்றடையும் வகையில் கல்லணைக்கால்வாயில் கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்

கடைமடை பகுதிக்கு விரைவில் சென்றடையும் வகையில் கல்லணைக்கால்வாயில் கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என பழனிமாணிக்கம் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-08-24 23:00 GMT
தஞ்சாவூர்,

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறந்து விடப்பட்டது. அப்போது தஞ்சையை அடுத்த கல்விராயன்பேட்டை பகுதியில் கல்லணைக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.

இந்த உடைப்பு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. நேரில் பார்வையிட்டார். அவருடன் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் இருந்தனர்.

கூடுதல் தண்ணீர்

அப்போது விவசாயிகள் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கான்கிரீட் சுவரின் உயரத்தை 2 அடி கூட்ட வேண்டும். மேலும் ஆற்றின் வலது கரையை பலப்படுத்த வேண்டும். தற்போது 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்னும் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் பழனிமாணிக்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்லணைக்கால்வாயில் தண்ணீர் கடைமடை பகுதிக்கு இன்னும் விரைவாக சென்றடைய கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும். கரைகளை கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். டெல்டா பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால், கூடுதலாக தண்ணீர் திறந்தால் விரைவில் கடைமடை பகுதிக்குசெல்லும்.

புதிய பயிர்க்கடன்

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரில் பாதி அளவு கொள்ளிடத்திலும், மீதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயிலும் பிரித்து விடப்படுகிறது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக இருப்பதால் கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரியில் திறந்து விட வேண்டும். கடைமடை பகுதிக்கு கடந்த 7 ஆண்டுகளாக தண்ணீர் சரிவர செல்லவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடும் நிலவியது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மேட்டூர் பகுதியில் இன்னும் உபரி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். அவ்வாறு சேமித்தால் டெல்டா பகுதிக்கு உரிய தண்ணீர் வராது. உபரி தண்ணீர் மட்டும் தான் வரும். விவசாயிகளுக்கான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய கடன்களை கொடுக்க வேண்டும். ஆனால் அரசு புதிய கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்காமல் ஏக்கருக்கு ரூ.600 மானியம் வழங்குவதில் குறியாக உள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் உடனடியாக தூர்வாரும் பணிகளை நிறுத்திவிட்டு, அந்த நிதியை கொண்டு அடுத்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையென்றால் செயற்கையாக வறட்சியை ஏற்படுத்துவதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்