6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல், கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டன

கோவையில், 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று முதல் தளர்த்தப்பட்டன. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

Update: 2019-08-26 23:00 GMT
கோவை,

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஏராளமானோர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். அங்கு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் மற்றும் இலங்கையை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கோவையில் ஊடுருவி உள்ளதாகவும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து கோவையில் கடந்த 22-ந் தேதி இரவு 9 மணி முதல் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உடனடியாக கோவை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சென்னையில் இருந்து 80 கமாண்டோ படை வீரர்களும், கோவையை சேர்ந்த 50 அதிவிரைவுப்படை வீரர்களும் இணைந்து கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். கடந்த 4 நாட்களாக மாநகருக்குள் வரும் அனைத்து பகுதிகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. ரெயில் நிலையம், கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கேரளாவில் தலைமறைவாக இருந்த அப்துல் காதர் என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சித்திக் (வயது 27), உக்கடத்தை சேர்ந்த ஜாகீர் (25) ஆகியோரை மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் 2 பேருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்பது உறுதியானது. இதைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

இந்த நிலையில் கோவையில் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று முதல் தளர்த்தப்பட்டன. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறியதாவது:-

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலை தொடர்ந்து கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 800 ஆக குறைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கோவையில் கமாண்டோ படை வீரர்களின் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் வழிபாட்டு தலங்கள், சோதனைச்சாவடிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு தொடரும். ஆங்காங்கே வாகன சோதனை இனி நடத்தப்படமாட்டாது. இதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். உளவுத்துறையிடமிருந்து வந்த தகவலை தொடர்ந்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் தற்போது அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் போலீசாரின் வழக்கமான பணிகள் நேற்று முதல் தொடங்கின. போச்சம்பள்ளியில் இருந்து வந்துள்ள ஒரு பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீசார் கோவைப்புதூரை சேர்ந்த 2 பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீசார் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் போலீசாரின் சோதனை நேற்று தொடர்ந்து நடந்தது. மேட்டுப்பாளையத்தில் கமாண்டோ போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கோவை, நீலகிரி மாவட்ட எல்லைகள் மற்றும் தமிழக-கேரள மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் உள்ளூர் போலீசார், ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை புறநகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கையும் ஆயிரத்திலிருந்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு மண்டலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கையும் 7 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.

மேலும் செய்திகள்