மதுக்கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

மதுக்கடையை மூடக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-26 22:15 GMT
ஊட்டி,

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி ஊட்டி அருகே பில்லிக்கம்பை கிராம மக்கள் இடையூறாக உள்ள மதுக்கடையை மூடக்கோரி மனு கொடுக்க வந்தனர். அவர்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், மதுக்கடையை உடனடியாக மூடக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணும்படி கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பில்லிக்கம்பை கிராமத்தில் அரசின் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்றக்கோரி 4 முறை மனு அளித்தோம். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும், இதுவரை மதுக்கடை அகற்றப்படவில்லை. கடை அமைந்து உள்ள பகுதியில் பல தரப்பட்ட மக்கள் வசித்து வருவதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபிரியர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லுரி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை சாலையில் வீசுவதோடு, தகாத வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் பெண்கள், பள்ளி குழந்தைகள் முகம் சுளிக்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடையை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து கடையை மூட வலியுறுத்தி மதுக்கடை முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. கோத்தகிரி பாரதிநகர், அட்டவலை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாரதிநகர், அட்டவலை பகுதிகளில் 75 குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர சாலை அமைக்கப்படவில்லை. இதனால் நாங்கள் அவதி அடைந்து வருகிறோம். மேலும் குடிநீர், தடுப்புச்சுவர், நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மக்களுக்கு குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுவது கிடையாது. குடிநீர் வேண்டி போராட்டம் நடத்தினால் மட்டுமே தண்ணீர் வருகிறது. ஆகவே எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைத்து விடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்