மாவட்டத்தில் சிறப்பு வாகன சோதனை: 6 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்கள் நடந்த சிறப்பு வாகன சோதனையில் 6 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-08-26 21:30 GMT
சேலம், 

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பஸ், ரெயில் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்களுக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள ஜங்ஷன் ரெயில் நிலையம், டவுன் ரெயில் நிலையம், ஓமலூர் மற்றும் ஆத்தூர் ரெயில் நிலையங்கள், சேலம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், பள்ளி வாசல்களில் 4-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, முக்கிய இடங்களில் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல் என போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதன் படி மாநகரில் 3 ஆயிரம் வழக்குகளும், மாவட்டத்தில் 3 ஆயிரம் வழக்குகளும் என மொத்தம் 6 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்