நாகர்கோவில் அருகே பரபரப்பு அழிக்காலில் கடல் நீர் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்தது பொதுமக்கள் அச்சம்

நாகர்கோவில் அருகே அழிக்காலில் நேற்று மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2019-08-27 23:15 GMT
ராஜாக்கமங்கலம்,

நாகர்கோவில் அருகே வெள்ளிச்சந்தையை அடுத்த அழிக்கால் மீனவ கிராமத்தில் கடந்த 21-ந் தேதி நள்ளிரவில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. கடற்கரை பகுதியில் இருந்த ஏராளமான வீடுகளுக்குள் கடல் நீரும், மணலும் சேர்ந்து புகுந்தது. இதனால், மீனவ மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அங்குள்ள மேடான இடங்களில் அடைக்கலம் புகுந்தனர்.

வீடுகளில் புகுந்த மணல் குவியல்களை கணபதிபுரம் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் இன்னமும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. பல வீடுகளில் மக்கள் இன்னமும் குடியேற முடியாமல் உள்ளனர்.

மீண்டும் ராட்சத அலைகள்

இந்தநிலையில் நேற்று காலையில் அழிக்காலில் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை கடந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த முறை கடல் சீற்றம் ஏற்பட்ட போது, பேரூராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கடற்கரையில் தற்காலிக தடுப்புகளாக மணல்மேடு அமைத்திருந்தனர். அவற்றையெல்லாம் கடல் அலை நேற்று இழுத்து சென்றது.

தெருக்களில் வெள்ளம்

மேலத்தெரு, நடுத்தெரு, கீழத்தெரு என அனைத்து பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. தெருக்களில் முழங்கால் அளவுக்கு கடல்நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே, கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததால் நேற்று மீனவ மக்கள் தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களாகவே செய்ய தொடங்கினர். குறிப்பாக, வீடுகளில் கடல் நீர் புகுவதை தடுக்க வாசலின் முன்பு மணல் மூடைகளை அடுக்கி தண்ணீர் வராதவாறு தடுப்பு ஏற்படுத்தினர்.

ஆனால், அதையும் கடந்து 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளில் இருந்த டி.வி., மிக்சி, கியாஸ் அடுப்பு, கட்டில், துணிமணிகள் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் நாசமானது. வீடுகளில் புகுந்த தண்ணீரை மீனவர்கள் பாத்திரம் மூலம் வெளியேற்றினர். மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டதால் பெரும்பாலான வீடுகளில் கடல்நீர் செல்லவில்லை.

வீடுகளை விட்டு வெளியேற்றம்

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி அந்த பகுதியில் உள்ள ஆலய வளாகத்திலும், மண்டபத்தில் தஞ்சம் புகுந்தனர். நேற்று காலையில் தொடங்கிய கடல்சீற்றம் தொடர்ந்து நீடித்ததால் அழிக்கால் பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் காணப்பட்டனர்.

ஒரு வாரத்துக்குள் 2 முறை கடல்சீற்றம் ஏற்பட்டு குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கலெக்டர் பார்வையிட்டார்

இதற்கிடையே அழிக்காலில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

அழிக்கால் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ மக்கள் வாழும் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது நலன் கருதி தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடியே 10 லட்சம் செலவில், தூண்டில் வளைவு அமைக்கப்படும். அதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் தூண்டில் வளைவு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார். 

மேலும் செய்திகள்