ஊதிய உயர்வு வழங்கக்கோரி குமரி மாவட்டத்தில் டாக்டர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு வழங்கக்கோரி குமரி மாவட்டத்தில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-27 22:30 GMT
நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. அதாவது புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை டாக்டர்கள் புறக்கணித்தனர். அதே சமயத்தில் அவசர சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழக்கம் போல நடந்தன. குமரி மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டமானது குமரி மாவட்ட மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

இதையொட்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாக்டர் சுரேஷ்பாலன் தலைமை தாங்கினார். திரளான டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி டாக்டர் சுரேஷ்பாலன் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் என சுமார் 300 டாக்டர்கள் கலந்துகொண்டு பணிக்கு செல்லவில்லை. எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றி தரவேண்டும். இல்லை என்றால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்”என்றார்.

அவதி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சுமார் 140 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெரும்பாலான நோயாளிகளுக்கு பயிற்சி டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்தார்.

மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். 

மேலும் செய்திகள்