புகைப்படம், ‘வீடியோ’ எடுத்து அனுப்பலாம்: போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க ‘செயலி’

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக செல்போன் செயலி நடைமுறையில் உள்ளது. இந்த செயலியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2019-08-29 23:45 GMT
சென்னை,

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் பொதுமக்கள் நேரடியாக போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு சந்தேகங்கள் குறித்து தொடர்புகொள்ள வசதியாக
‘’GCTP Citizen Services”
என்ற செல்போன் செயலி(ஆப்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அனைவரின் செல்போன்களிலும் இந்த செயலி இருக்கும். போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராத தொகை ‘இ-சலான்’ மூலமாக செலுத்தும் வசதி குறித்த விவரங்களை இந்த செயலி மூலம் பொதுமக்களே அறிந்து கொள்ள முடியும்.

வாகன எண்ணை இந்த செயலியில் உள்ளடு செய்தவுடன் நிலுவையில் உள்ள அபராத தொகை குறித்த தகவல்களை பெறலாம். இந்த அபராத தொகையை இணையதள வசதி மூலம் ஆன்-லைனில் செலுத்தலாம். போக்குவரத்து விதிமீறல்களை பொதுமக்கள் நேரில் கண்டால், அவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இந்த செயலி மூலம் பதிவு செய்ய முடியும். வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்ட இடம், நேரம் போன்ற விவரங்கள் இந்த செயலியுடன் இணைக்கப்பட்ட ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் தானாகவே பதிவாகிவிடும். அதனடிப்படையில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பழைய புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை இந்த செயலில் பதிவேற்றம் செய்ய முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்