சென்னை விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களையும் கைப்பற்றினர்.

Update: 2019-08-29 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த இஜாஸ் கான்(வயது 26) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் வெளிநாட்டு சிகரெட்டுகள், டி.வி.டி. பிளேயர்கள், கம்ப்யூட்டர் விளையாட்டு கருவிகள் இருந்தன. அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 379 கிராம் தங்கம், ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள், ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.டி. பிளேயர்கள், கம்ப்யூட்டர் விளையாட்டு கருவிகள் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அஸ்லாம் நிசார்(22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதுடன், பதற்றத்துடன் காணப்பட்டதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.17 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள 438 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பேரிடம் இருந்து ரூ.32 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 817 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள், கம்ப்யூட்டர் விளையாட்டு கருவிகள், டி.வி.டி. பிளேயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்வதற்காக குடியுரிமை பகுதியில் நின்றிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா(35) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து முகமது அலி ஜின்னாவின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவர் கடத்த முயன்றது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்