கவர்னரின் செயலாளர் பங்கேற்க இருந்த சிறப்பு கூட்டம் ரத்து பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பால் திடீர் நடவடிக்கை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கவர்னரின் செயலாளர் பங்கேற்க இருந்த சிறப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2019-08-29 22:15 GMT
திருச்சி,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அனைத்து துறை தலைவர்களுக்கு நேற்று முன்தினம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், கவர்னரின் செயலாளர் ராஜகோபால் பல்கலைக்கழகத்துக்கு வருகை தர இருப்பதாகவும், பல்கலைக்கழக அரங்கில் 29-ந்தேதி (நேற்று) மாலை 6 மணி அளவில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக அனைத்து துறைத்தலைவர்கள், இயக்குனர்கள், ஒருங்கிணைப்பாளர்களுடன் கவர்னரின் செயலாளர் ராஜகோபால் கலந்துரையாடல் நடத்த இருப்பதாகவும், இதையொட்டி பேராசிரியர்கள் அழகான ஆடை அணிந்து வர வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.

ஆனால் எந்த தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இந்த சுற்றறிக்கையை கண்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக பல்கலைக்கழகங்களில் நடக்கும் பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கவர்னரோ அல்லது உயர் கல்வித்துறை அமைச்சரோ பங்கேற்க வரும்போது துணைவேந்தர் தான் முறைப்படி அறிவிப்பு வெளியிடுவார். ஆனால் அதற்கு மாறாக, கவர்னரின் தனிச்செயலாளர் பங்கேற்க உள்ள சிறப்பு கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பதிவாளர் அறிக்கை வெளியிட்டு உள்ளதால் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவ- மாணவிகள் இடையே எதிர்ப்பு கிளம்பியது.

திடீர் ரத்து

மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் கவர்னரின் செயலாளர் பங்கேற்று அதுகுறித்து ஆலோசிக்கக்கூடுமோ என்ற சந்தேகம் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்தது. இதனால் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் கவர்னரின் செயலாளர் பங்கேற்பதாக இருந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கொச்சைப்படுத்தும் செயல்

இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கவர்னரின் செயலாளர் பங்கேற்பார் என்று கூறப்படுவது இதுவரை நடக்காத ஒன்று. இது மரபு கிடையாது. துணைவேந்தர்களை நியமிப்பது தான் கவர்னர் அலுவலக பணி. கல்வி தொடர்பான விஷயங்களை உயர் கல்வித்துறையும், பல்கலைக்கழகங்கள் மட்டும் தான் பார்த்து கொள்ள வேண்டும். இதுதவிர, பேராசிரியர்கள் அனைவரும் அழகான உடைகளை உடுத்தி வரவேண்டும் என்று கூறியிருப்பது பல்கலைக்கழக பேராசிரியர்களை கொச்சைப்படுத்தும் செயல். எங்களுடன் கலந்துரையாடுவதற்கு கவர்னரின் செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது தொடர்பாக எங்களது அதிருப்தியை தெரிவித்தவுடன் அவசரமாக கூட்டத்தை ரத்து செய்து விட்டனர்” என்று கூறினர்.

மேலும் செய்திகள்