பச்சிளம் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுவையில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-29 23:47 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை, அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் துணையோடு தேசிய தடுப்பூசி திட்டத்தினை சமுதாய பங்களிப்புடன் 100 சதவீதம் செயல்படுத்தி வருகிறது. புதுவை அரசு சுகாதார துறை தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் ’ரோட்டா வைரஸ்’ கிருமியில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை புதுவை பழைய மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நகர்புற சுகாதார மையத்தில் நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் பிரசாத் குமார் பாண்டா, இயக்குனர் ராமன், சுகாதார இயக்கக மேலாண் இயக்குனர் மோகன் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ரோட்டா வைரஸ் கிருமி இளம்சிறுவர்களுக்கு தீவிர வயிற்று போக்கை ஏற்படுத்தும். சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தனிநபர் மற்றும் சுற்றுப்புற சுத்தத்தை மேம்படுத்துதல் மூலமும், தடுப்பு மருந்தை உரிய காலத்தில் வழங்குதல் மூலமும் ரோட்டா வைரஸ் கிருமியில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும். இந்த தடுப்பு மருந்து வாய் வழியாக 6,10 மற்றும் 14 வார பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு வியாழக் கிழமையும் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்