செல்போனில் பேசியதை உறவினர்கள் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் விஷம் தின்று தற்கொலை

கும்பகோணம் அருகே செல்போனில் பேசியதை உறவினர்கள் கண்டித்ததால் மனவேதனை அடைந்த என்ஜினீயரிங் மாணவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-31 22:15 GMT
கும்பகோணம்,

தஞ்சை கீழவாசல் குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் தீபக்குமார் (வயது20). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜீனியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கும்பகோணம் அருகே கோவிந்தகுடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தீபக்குமார் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) திடீரென தின்று மயங்கி விழுந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செல்போனில் பேச்சு

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தீபக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை உறவினர்கள் கண்டித்ததால் மன வேதனை அடைந்த தீபக்குமார் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்