தாளவாடி அருகே யானை துரத்தியதில் குழிக்குள் தவறி விழுந்து விவசாயி படுகாயம்

தாளவாடி அருகே யானை துரத்தியதில் குழிக்குள் தவறி விழுந்து விவசாயி படுகாயம் அடைந்தார்.

Update: 2019-09-01 22:45 GMT
தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட எட்டிக்குட்டை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இவருடைய வீடும் தோட்டத்திலேயே உள்ளது. சரவணன் தன்னுடைய தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். கரும்பு பயிருக்கு இரவு நேரத்தில் இவர் காவல் இருப்பது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் காவலுக்கு இருந்து உள்ளார். அப்போது அந்த தோட்டத்துக்குள் ஒற்றை யானை வந்து உள்ளது. இதை கவனிக்காமல் அவர் டார்ச் லைட் அடித்து உள்ளார்.

இதற்கிடையே அருகில் வந்த யானை, அவரை திடீரென துரத்த தொடங்கியது. யானையிடம் இருந்து தப்பி அவர் ஓடினார். அப்போது அவர் அருகில் இருந்த குழிக்குள் தவறி விழுந்துவிட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். யானை சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு பின்னர் சென்றுவிட்டது. யானை சென்றதும் அவர் சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழிக்குள் கிடந்த அவரை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்