குண்டலுபேட்டை அருகே புலி தாக்கி விவசாயி சாவு கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

குண்டலுபேட்டை அருகே புலி தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Update: 2019-09-01 23:04 GMT
கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பந்திப்பூர் வனப்பகுதி எல்லையில் குந்தகெரே வனச்சரகத்தையொட்டி சவுடஹள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்திலேயே அங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த கிராமத்தில் புலி ஒன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

அந்த புலி, கிராமத்துக்குள் புகுந்து நாய், கோழிகளை அடித்து கொல்வதுடன், வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு நிற்கும் மாடுகளையும் அடித்து கொன்று அட்டகாசம் செய்து வருகிறது. புலியின் நடமாட்டத்தை அந்தப்பகுதி மக்களும் பார்த்துள்ளனர். இதனால் மிகவும் பீதியடைந்துள்ள மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே பயந்து போய் உள்ளனர்.

இந்த நிலையில் சவுடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவமாதய்யா (வயது 55). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார். அவர் தனது மாடுகளை குந்தகெரே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள தனது தோட்டத்துக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதேபோல, நேற்று முன்தினமும் சிவமாதய்யா தனது மாடுகளை தோட்டத்துக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

அப்போது மாடுகள் அங்கு மேய்ந்து கொண்டிருந்தன. அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று தோட்டத்தில் இருந்த புதருக்குள் பதுங்கி கிடந்தது. அந்த புலியை பார்த்ததும் மாடுகள் மிரண்டு ஓடின. அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த புலியை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவமாதய்யா, அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் புலி, அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்று தாக்கியது. பின்னர் அவரை புலி அடித்து கொன்றது.

இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற சிவமாதய்யாவின் மாடுகள் மட்டும் வீட்டை நோக்கி ஓடி வந்தன. மாடுகள் தனியாக வீட்டுக்கு வந்ததால் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிவமாதய்யாவின் குடும்பத்தினர் மற்றும் அந்தப்பகுதி மக்கள் வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு சிவமாதய்யா இல்லை. இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் சிவமாதய்யாவின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிவமாதய்யாவை அடித்து கொன்று வனப்பகுதிக்குள் தூக்கி சென்ற புலி, பாதி உடலை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.

பாதி உடலுடன் கொடூரமாக கிடந்த சிவமாதய்யாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர், அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், சிவமாதய்யா மற்றும் அந்தப்பகுதியில் பதிவாகி இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவை புலியின் கால்தடங்கள் என்று வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனால் சிவமாதய்யாவை புலி அடித்து கொன்றது பாதி உடலை சாப்பிட்டு சென்றது உறுதி செய்யப்பட்டது.

இதனால் பீதியடைந்த அந்தப்பகுதி மக்கள், புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பலியான விவசாயியின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட வனத்துறையினர், புலி தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். பின்னர் வனத்துறையினர், புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். மேலும் புலியை பிடிக்க அந்தப்பகுதியில் கூண்டு வைக்கவும் முடிவு செய்துள்ளனர். சவுடள்ளி பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்