சந்ததியினர் பயன்பெற நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் - கலெக்டர் சாந்தா வலியுறுத்தல்

சந்ததியினர் பயன்பெற நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-09-03 22:45 GMT
மங்களமேடு,

இந்திய அரசின் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் ‘நீர் மேலாண்மை நெறிமுறைகள்’ குறித்து மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கம் நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் மற்றும் மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கான்கிரீட் காடுகளாக மாறி வரும் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக மழையை பெற நிறைய மரங்களை நட வேண்டும். அனைவரும், ஆர்வத்துடன் குடி மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயத்தில் ஒரே பயிரை திரும்ப, திரும்ப பயிரிடாமல் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதும், விவசாயத்தில் இளைஞர்கள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கது. விவசாயத்தை சிறந்த தொழில்நுட்பத்துடன் மேற்கொண்டு, அதிக மகசூல் பெறவேண்டும். இதற்கு ஆதாரமான மழைநீரை சேமிக்க குளம், குட்டைகள் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர் வாரி, நல்ல வளமான நீர் ஆதாரங்களை நம் சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சக உதவி செயலாளர் வந்தனா கர்க், புதுடில்லி மத்திய எஃகு துறை அமைச்சக துணை செயலாளர் முரளி, மத்திய மண் மற்றும் பொருள்கள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி லலித்குமார், திருச்சி அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் நடராஜன், பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து மானாவாரி பருத்தி சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள், பயிர் சாகுபடியில் நீர் மேலாண்மை மற்றும் தண்ணீர் பாசன யுத்திகள், மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை, வறட்சி மேலாண்மை தொழில் நுட்பங்கள், மாற்றுப்பயிர்கள் திட்டம் உள்ளிட்ட தலைப்புகளில் வேளாண் நிபுணர்கள் உரையாற்றினர். கருத்தரங்கில் நீர் சேமிப்பு குறித்த செயல் விளக்கங்களும், கருத்துக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும் செய்திகள்