திருப்பத்தூர் அருகே, கொலையுண்ட தொழிலாளியின் உறவினர்கள் மறியல்

திருப்பத்தூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-03 22:45 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூரில் உள்ள கலைஞர் நகரை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகன் குமரேசன் (வயது 35), சுமை தூக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி ஷீலா. இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். குமரேசனும், சக தொழிலாளி ஒருவரும் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு, கூலி பணத்தை பங்கு பிரித்து கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வேலு மகன் சூர்யாவுக்கும் (20), குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குமரேசன், சூர்யாவை கையால் தாக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த சூர்யா வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து, குமரேசனின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று சூர்யாவை கைது செய்யக்கோரி குமரேசனின் குடும்பத்தினர், உறவினர்கள் திருப்பத்தூர்-சேலம் மெயின் ரோட்டில் கலைஞர் நகர் என்ற இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, சூர்யாவை கைது செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்