காலிமனைகளை பராமரிக்காத 263 பேர் மீது வழக்கு - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

காலிமனைகளை பராமரிக்காத 263 பேர் மீது வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2019-09-03 22:30 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

சந்திரபிரியங்கா: 2 ஆண்டுகளுக்கு முன்னர் காலிமனைகளை உரிமையாளர்கள் சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும் என நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் மூலம் உத்தரவிடப்பட்ட ஆணை நடப்பில் உள்ளதா? அது எவ்வளவு நாட்கள் கடைபிடிக்கப்பட்டது? இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா?

அமைச்சர் நமச்சிவாயம்: 2017-ம் ஆண்டு முதல் டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும், குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்தை பேணவும், உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக பத்திரிகை குறிப்புகள் வெளியிடப்பட்டு காலிமனை உரிமையாளர்கள் அவர்களது மனைகளை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பராமரிக்காதவர்கள் மீது துணை மாவட்ட நீதிபதியின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடைமுறை ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் தொடர்ந்து நடவடிக்கை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

சந்திரபிரியங்கா: சட்டம் போட்டதில் இருந்து அதை யாராவது பின்பற்றினார்களா? இப்போதும் காலிமனைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பலன் இல்லை.

அமைச்சர் நமச்சிவாயம்: காலிமனையை பராமரிக்காத 263 உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சந்திரபிரியங்கா: காலி மனைகளை வாங்கிபோட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். அந்த இடத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமைச்சர் நமச்சிவாயம்: எல்லா இடத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. இதற்காக நடவடிக்கை எடுக்கிறோம்.

பாஸ்கர்: அதிக அளவு பணம் வைத்திருப்பவர்கள் நிலத்தை வாங்கி போட்டு வைத்துள்ளனர். அதை பராமரிக்கக்கூட செய்வதில்லை.

டி.பி.ஆர்.செல்வம்: உள்ளாட்சித்துறையில் வரிகளை 4 மடங்கு உயர்த்தி உள்ளர்கள். அதை வைத்து பராமரிக்க வேண்டியதுதானே.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்