ஆடலூரில், காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

ஆடலூரில் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் 3 அரசு பஸ்களை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-04 22:45 GMT
கன்னிவாடி,

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான கே.சி.பட்டி, பெரும்பாறை, ஆடலூர், மருமலை, பெரியூர், நடுப்பட்டி, குப்பம்மாள்பட்டி, பள்ளத்துக்கால்வாய், சேம்படி ஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து அங்கு பயிரிடப்பட்டிருந்த காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர் களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் கே.சி.பட்டி, ஆடலூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, காபி பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. மேலும் வீடுகளையும் சேதப்படுத்துகின்றன. மேலும் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்தனர்.

அதன்படி நேற்று காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி விவசாயிகள் ஒன்று திரண்டு ஆடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாறை, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, கே.சி.பட்டி, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பாச்சலூர், பெரியூர், நடுப்பட்டி, குப்பம்மாள்பட்டி, நல்லூர்காடு, பள்ளத்துக்கால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் அவர்கள், திண்டுக்கல்லில் இருந்து மலைப்பகுதிகளுக்கு சென்ற 3 அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் வன பாதுகாவலர் சக்திவேல், திண்டுக்கல் கோட்ட உதவி வனபாதுகாவலர் நவநீத கிருஷ்ணன், கன்னிவாடி வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் 11 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்