புத்தாநத்தத்தில் பரபரப்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு - இந்து முன்னணியினர் சாலை மறியல்

புத்தாநத்தத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மர்ம நபர் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து இந்து முன்னணியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-04 23:00 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதே போல் இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதி புத்தாநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று மதியம் 20 விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்பட்டு காளியம்மன் கோவில் திடலுக்கு கொண்டு வந்ததும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் தொடங்கியது. விசுவ இந்து பரிஷத் மாநில துணைத்தலைவர் என்.ஆர்.என்.பாண்டியன் ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து புத்தாநத்தம் கடைவீதியின் வழியாக தாரை தப்பட்டை முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் ஊர்வலத்தில் கல்வீசியதாக கூறப்படுகின்றது. இதை பார்த்து ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் ஆகியோர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து இந்து முன்னணியினர் மறியலை கைவிட்டனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் ஊர்வலம் தொடங்கியது. புத்தாநத்தத்தில் இருந்து தொடங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் இடையபட்டியில் உள்ள விநாயகர் குளத்தை வந்தடைந்ததும் சிலைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டன.

திருச்சி போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்