வருங்கால இந்தியாவை வழிநடத்த உள்ள மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் பணி மகத்தானது - முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து

வருங்கால இந்தியாவை வழிநடத்த உள்ள மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் பணி மகத்தானது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-04 23:15 GMT
புதுச்சேரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தினம் என்பது ஒரு உன்னதமான பணியை மேற்கொள்ளும் தன்னலமற்ற ஆசிரியர்களை சிறப்பிக்கும் பொருட்டு கொண்டாடப் படும் விழாவாகும். மனித ஆன்மாவின் பொறியாளர்கள் ஆசிரியர்கள். புத்தகத்தில் உள்ளதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது மட்டுமே ஒரு ஆசிரியரின் முழுமையான பணியாகாது. ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, அறிவை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதே ஒரு நல்லாசிரியரின் கடமையாகும்.

ஆசிரியர்கள் மாணவ சமுதாயத்திற்கு முறையான வழிகாட்டுதலை அளித்தால் அந்த நாடு வல்லரசாக முன்னேறும் என்று சாக்ரடீஸ் கூறியுள்ளார். வருங்கால இந்தியாவை வழிநடத்த உள்ள மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் சீரிய பணி மகத்தானது. அவர்களது சேவை சிறக்க வேண்டும். அனைவரும் தரமான கல்வியை வழங்க இந்த நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

கற்பிக்கும் பணியே அனைத்து தொழில்களையும் உருவாக்குகிறது. எனவே தான் கல்வி கற்றலை மற்ற நற் செயல்கள் எல்லாவற்றையும் விட உயர்ந்தனவாக கருது கிறோம். மாணவர்கள் தம் பள்ளி, கல்லூரி பருவத்தில் பெற்றோரை விட ஆசிரியர் களிடமே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஆசிரியர் பணியை புனித பணியாக கருதி பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிறந்த ஆசிரியர்களை அரசு விருது வழங்கி கவுரவிக்கிறது. ஆசிரியர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்