திருவொற்றியூர் அருகே தீயில் கருகி ஆசிரியை பலி

எர்ணாவூரில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில், உடல் கருகி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் பலத்த காயமடைந்தார்.

Update: 2019-09-05 23:00 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் பாரதியார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் யாபேஸ் (வயது 35). இவர் அதே பகுதியில் செங்கல், மணல் விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெபா(32). பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 4 வயதில் நெல்சன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெபா தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் பள்ளி சம்பந்தமான வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டதால் மெழுகுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு அந்த வெளிச்சத்தில் வேலையை தொடர்ந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மெழுகுவர்த்தி அறையில் அருகில் இருந்த மண்எண்ணெய் கேன் மீது தவறி விழுந்தது. மண்எண்ணெயில் தீப்பற்றி கொண்டதில் கேன் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில், ஆசிரியை ஜெபா மீது தீப்பற்றி கொண்டது.

இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். அவரது சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த யாபேஸ் ஓடிவந்து ஜெபா உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றார். இதில் அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தீ விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், எண்ணூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் தீயில் சிக்கி கருகிய ஜெபா பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த தீக்காயம் அடைந்த அவரது கணவர் யாபேஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தீவிபத்து நடந்த இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார் ஜெபா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியை ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தது அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்