சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை நெல்லையில் நீடிக்க கோரி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை நெல்லை மாவட்டத்தில் நீடிக்க கோரி நேற்று சங்கரன்கோவிலில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-09-05 22:15 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அவ்வாறு மாவட்ட பிரிவினை மேற்கொள்ளும் போது, சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட சங்கரன்கோவில் ஒன்றியம், குருவிகுளம் ஒன்றியம், மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகள் நெல்லை மாவட்டத்திலேயே தொடர்ந்து இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதனை வலியுறுத்தி நேற்று மாலையில் சங்கரன்கோவில் தேரடி திடலில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தி.மு. ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம் பாண்டியன், சசிமுருகன், சீனிவாசன், சிங்கப்புலி சசிக்குமார், ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஆறுமுகச்சாமி வரவேற்று பேசினார்.

மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைகுமார், மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரமேஷ், செல்வம், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான் உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாநில துணை செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் நடுவை முருகன், முகம்மது ஹக்கீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்