“ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது” கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

“ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. காங்கிரஸ் மீது பழி சுமத்தவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது“ என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.

Update: 2019-09-06 22:45 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நாங்குநேரியில் நேற்று நடந்து. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு, முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அவர் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர், மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை துணிச்சலோடு சொன்னவர். இதனால் தான் அவரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

ஊழல் நிறைந்த கட்சி போன்றது என்று காங்கிரஸ் மீது பழி சுமத்துவதற்காகவே ப.சிதம்பரம், கர்நாடக முன்னாள் மந்திரி சிவகுமார் ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை மக்கள் நன்கு அறிவார்கள். ப.சிதம்பரம் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்து உள்ளது என்பதும் மக்களுக்கு தெரியும். சிதம்பரம் கைது குறித்து கபில்சிபல் கேட்ட கேள்விக்கு சி.பி.ஐ.யால் சரியான பதில் கூற முடியவில்லை.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சியை கலைக்க பாரதீய ஜனதா கட்சி குதிரை பேரம் பேசி பல ஆயிரம் கோடி ரூபாய் கைமாற்றப்பட்டுள்ளது. இது சி.பி.ஐ.க்கு தெரியாதா? காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திகார் சிறையில் நடக்கக்கூடிய அளவிற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கைது உள்ளது என்று சுப்பிரமணிய சுவாமி சொன்னதாக கூறுகிறீர்கள்.

முதல் சுதந்திர போராட்டத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அலிகார் சிறையில் நடந்தது. பாரதீய ஜனதா ஆட்சியை அகற்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்தியாவை மீட்டு எடுக்க நடக்கின்ற 2-வது சுதந்திர போராட்டத்திற்கு முன்பு நடக்கின்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திகார் சிறையில் நடந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம்.

நாங்கள் அதிபுத்திசாலியான ஒருவரை விசாரிக்க வேண்டும், அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கூறினார்கள். அவர்களை நான் கேட்கிறேன், சிதம்பரத்தை விட நீங்கள் அதிபுத்திசாலியாகிய பிறகு தானே அவரை கைது செய்து இருக்க வேண்டும். சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி உள்ளது. அவரது கைதை கண்டித்து டெல்லி, கன்னியாகுமரியில் போராட்டம் நடந்து உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று உள்ளனர். அதுபோல் தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடிஆதித்தன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்