மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஈரோடு வந்தது

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஈரோடு வந்தடைந்தது.

Update: 2019-09-07 22:45 GMT
ஈரோடு,

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மேட்டூர் அணையின் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஈரோட்டை வந்தடைந்தது. இதனால் பரந்து விரிந்த காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. ஈரோடு காவிரிக்கரை பகுதியில் காவிரி ஆறு கடல்போல் காட்சி அளித்தது. மேலும், பி.பி.அக்ரஹாரம், வெண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டளை கதவணை வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், அங்கிருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதன் அழகை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பாலத்தின் மேலே நின்றுகொண்டு ரசித்தனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் இரவில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறையினர், போலீசார் உள்ளிட்டோர் காவிரிக்கரை பகுதிக்கு சென்று தண்டோரா மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அங்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி முதல் 75 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட உள்ளது. எனவே காவிரி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் தண்ணீரில் இறங்கி குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பிலும், தண்டோரா மூலமாகவும், ஒலிப்பெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனவே ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம், சிங்கம்பேட்டை, கோனேரிப்பட்டி, கூத்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு கரையோரமாக உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் காவிரி கரையோரமாக வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கையும் விடப்பட்டது.

ஆய்வின்போது அந்தியூர் தாசில்தார் மாலதி, மண்டல துணை தாசில்தார் சரவணன், நிலவருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அம்மாபேட்டை போலீசார் உடனிருந்தனர்.

இதேபோல் காவிரி ஆற்றில் படித்துறையில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. அதுமட்டுமின்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.

மேலும் காவிரி கரையோர பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பவானி கூடுதுறையில் உள்ள படித்துறைகளை தொட்டுக்கொண்டு பரந்து விரிந்து காவிரி ஆற்றில் வெள்ளம் சென்றது. இதனால் பக்தர்கள் புனிதநீராட தடை விதிக்கப்பட்டது.

மேலும் பவானி தாசில்தார் பெரியசாமி, நகராட்சி ஆணையாளர் பாரிஜான், பொறியாளர் கதிர்வேல், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை ஆகியோர் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர். இதையொட்டி பவானி கூடுதுறை மற்றும் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்