தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தாமிரபரணி ஆற்றை மீண்டும் சுத்தம் செய்யும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Update: 2019-09-07 21:30 GMT
நெல்லை,

தாமிரபரணி ஆற்றை மீண்டும் சுத்தம் செய்யும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குனர் சக்திநாதன் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்துவதின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது தாமிரபரணி ஆற்றை மீண்டும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் ஷில்பா கூறுகையில், “வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) நெல்லை அருகே நாரணம்மாள்புரம் ஆற்றுப்பகுதியில் சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்படுகிறது.

12-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை 61 இடங்களில் எந்திரங்கள் உதவியுடன் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. 14-ந்தேதி (சனிக்கிழமை) கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணியில் ஈடுபட விரும்புவோர் தங்களது விவரத்தை நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆதீஷ்குமார் (9841339016), ராஜேஷ் (9444215544), கல்யாணராமன் (9442497877), நல்லபெருமாள் (9994604544) ஆகியோரின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மணீஷ் நாரணவரே (நெல்லை), ஆகாஷ் (சேரன்மாதேவி), சிவகுருபிரபாகரன் (பயிற்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி மற்றும் பல்வேறு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், தன்னார்வ அமைப்பினர், சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்