கடத்தூர் அருகே பஸ் மோதி பள்ளி மாணவி பலி-பொதுமக்கள் சாலை மறியல்

கடத்தூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவி பலியானாள். இதனால் பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-09 22:30 GMT
மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி இந்த கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் வேப்பிலைப்பட்டி கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் நித்யா (வயது 13). இவள், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை சைக்கிளில் மாணவி நித்யா கடைக்கு சென்றாள். பின்னர் மீண்டும் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த செந்தில் மகன் சபரி(10) என்ற சிறுவனை சைக்கிளில் உட்காரவைத்து சிறுமி ஓட்டி சென்றாள்.

வேப்பிலைப்பட்டி-கேத்துரெட்டிப்பட்டி சாலையில் சென்ற போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ், மாணவி ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவி நித்யா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாள். உடன் சென்ற சிறுவன் சபரி படுகாயம் அடைந்தான். உடனே அக்கம் பக்கத்தினர் சிறுவன் சபரியை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிறுவனை மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் கல்லூரி பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாவட்ட கலெக்டர், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும். விபத்துகள் ஏற்படும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தாளநத்தம்-பொம்மிடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தர்மபுரி உதவி கலெக்டர் சிவன் அருள், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் விபத்தில் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்