பாலியல் புகார் விவகாரம், காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கட்டாய ஓய்வுக்கு ஐகோர்ட்டு தடை

பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-09-09 22:30 GMT
மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சினிமா மற்றும் மின்னணு ஊடக அறிவியல் துறையின் தலைவராக பணியாற்றிய கர்ணமகாராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்னுடைய வழிகாட்டுதலின் கீழ் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் முழுநேர ஆராய்ச்சி (பி.எச்டி) மாணவியாக ஒருவர் இருந்து வந்தார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி வகுப்பு மையத்திற்கு வரவில்லை. ஆனால் முன்கூட்டியே வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போடப்பட்டு இருந்தது. இதே செயலை அவர் வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக அவரை கண்டித்தேன்.

இதனால் விரோதம் கொண்ட அவர், என் மீது பாலியல் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவில் இடம்பெற்றவர்கள் சாதி ரீதியாக என் மீது பாகுபாடு காட்டினர். அவர்களது விசாரணை அறிக்கையில், உள் விசாரணை குழுவின் உறுப்பினராக இல்லாத உதவி பேராசிரியர் ஒருவர் கையெழுத்திட்டுள்ளார். விசாரணை குழு முறையாக விசாரிக்காமல் எனக்கு தண்டனை வழங்க பரிந்துரைத்தது. எனது தரப்பு விளக்கத்தையும் கருத்தில் கொள்ளவில்லை. அதன் அடிப்படையில் விளக்கம் அளிக்க கோரி, எனக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

விளக்கம் அளிக்க கூடுதலாக 15 நாள் அவகாசம் கோரினேன். அதை ஏற்கவில்லை. பின்னர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்தநிலையில் எனக்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். எனவே எனக்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரருக்கு கட்டாய ஓய்வு வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார். இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்