அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவி மீது திராவகம் வீச்சு - மற்றொரு மாணவருடன் பழகியதால் காதலன் வெறிச்செயல்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மற்றொரு மாணவருடன் பழகியதால் மாணவி மீது காதலன் திராவகம் வீசினார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-09-09 22:30 GMT
சிதம்பரம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பழைய கூடலூரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் முத்தமிழன் (வயது 19). இவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இளங்கலை (பி.பி.இ.எஸ்.) 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர், அண்ணாமலைநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தார்.

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கி, உடற்கல்வி இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். முத்தமிழன் மற்றும் அந்த மாணவி ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே பிரிவில் படித்து வந்ததாலும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். தினமும் நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த மாணவி, தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மாறாக அந்த மாணவி, பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மற்றொரு மாணவருடன் பழகி வந்தார். இது பற்றி அறிந்ததும் மனமுடைந்த முத்தமிழன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். பின்னர் மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து, அவரை காப்பாற்றினர்.

இதனை தொடர்ந்து நேற்று காலையில் வழக்கம்போல் முத்தமிழன் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். ஆனால் அவர், சக மாணவர்களுடன் சரியாக பேசாமல் இருந்தார். மாலையில் வகுப்பு முடிந்ததும் முத்தமிழன், பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு சென்றார்.

அங்கு அந்த மாணவி விளையாட்டு பயிற்சி மேற்கொண்டிருந்தார். இரவு 7 மணி அளவில் பயிற்சி முடிந்ததும், அந்த மாணவி விடுதி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது முத்தமிழன், அந்த மாணவியை வழிமறித்து தன்னுடன் பேச மறுப்பது ஏன்?, மற்றொரு மாணவருடன் நெருக்கமாக பழகுவது ஏன்? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தமிழன், அந்த மாணவியின் தலை முடியை பிடித்து, இழுத்து தாக்கினார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து, அந்த மாணவியின் முகத்தில் வீசினார். இதில் மாணவியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. வலிதாங்க முடியாமல் மாணவி அலறியதால், அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். பின்னர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். முத்தமிழனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, முத்தமிழனை மீட்டனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்ததால் அவர், உடனடியாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்