நாசரேத் பஸ் நிலையத்தில் பரபரப்பு: ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

நாசரேத் பஸ் நிலையத்தில் பள்ளிக்கூட ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-10 22:30 GMT
நாசரேத், 

நாசரேத் பஸ் நிலையத்தில் பள்ளிக்கூட ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியை

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள குமாரலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 53), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லதா (48). இவர்களுக்கு அருண்குமார் (27) என்ற மகனும், பிரியா (25) என்ற மகளும் இருந்தனர். அருண்குமார், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பிரியா, உடன்குடி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

இவர்களுடைய உறவினரின் திருமண விழா கோவையில் நாளை (வியாழக் கிழமை) நடக்கிறது. எனவே, அங்கு குடும்பத்தினருடன் செல்வதற்கு சேகர் திட்டமிட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் பிரியா தன்னுடைய தாயாரிடம், பள்ளிக்கூடத்துக்கு சென்று விடுப்பு எடுத்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். பின்னர் அவர் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல், மதியம் 1 மணியளவில் நாசரேத் பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர், சாணி பவுடரை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்தார்.

இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கையிலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்த பிரியா சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து, நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தற்கொலை செய்த பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியை பிரியா தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாசரேத் பஸ் நிலையத்தில் பள்ளிக்கூட ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்